‘வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சிறை’ - ஜூலை 31 கடைசி நாள் 

‘வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சிறை’ - ஜூலை 31 கடைசி நாள் 

‘வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு சிறை’ - ஜூலை 31 கடைசி நாள் 
Published on

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அ‌பாரதம், சிறை தண்டனை என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாயத்திற்காக வீட்டுக்கடன், சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சம்பளம், மற்ற வருவாய், வீடு, விவசாயத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் என ஆண்டு வருவாய் 50 லட்சத்திற்குள் உள்ள தனிநபர் ITR 1 என்ற படிவம் மூலம் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்‌. www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். 

ஜூலை 31ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் தாக்கல் செய்யப்படுபவை அனைத்தும் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளப்‌படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அப்படி காலதாமதமாக‌ வருமான கணக்குத் தாக்கல் செய்பவர்களுக்கு, அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அபராதத் தொகையுடன், வருமான வரித் தாக்கல் செய்யும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் செலுத்த நேரிடும் என்றும் வரிச் சலுகைகள் பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரி பிடிக்கப்பட்டவர்கள், உரிய தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்தால், அவர்களுக்கு ரீபண்ட் தொகை வட்டியுடன் வழங்கப்படும். 

காலதாமதமாக வருமானவரிக் கண‌க்கு தாக்கல் செய்தால் சட்டவிதிகளின் படி, 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து உரிய நேரத்திற்குள் வருமானவரிக் கணக்கைத்  தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com