ஆணவக்கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
ஆணவக்கொலைகளை தடுக்க பிறப்பித்த உத்தரவில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடந்திருக்காது என வித்யா ரெட்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கெனவே நீதிமன்றம் ஆணவக்கொலைகள் சம்பந்தமாக அளித்த பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும், மனுதாரர் தொடர்ந்த இந்த வழக்கு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.