“ஊழல் காவல்துறையினர் மீது நடவடிக்கை என்ன?” - நீதிமன்றம் கேள்வி
காவல்துறையில் நேர்மையான அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சிவகங்கை எஸ்பிக்கு உத்தரவிடக் கோரி, சந்திரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யும் காவல்துறையினரை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும், வழக்குத் தொடரப்போவதாகவும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது என்றும், விதிமீறல் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க ஆணையிட முடியும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
காவல்துறையினரை மறைமுகமாக மிரட்டும் விதமாக, பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆண்டின் 365 நாள்களும் பணியில் இருக்கும் காவல்துறையினர் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் என்றும், அவர்களை நீதிமன்றமும், காவல்துறையும், பொதுமக்களும் பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றத் தவறினால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படும் என்றும் கூறினார். நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

