பாமக-பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல்
பாமக பொதுக்குழுPT Web

பேரனுக்கு இளைஞரணித் தலைவர் பொறுப்பு... 1980-ல் ராமதாஸ் செய்த சத்தியம்! நடந்தது என்ன? முழுப் பின்னணி!

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது, மருத்துவர் ராமதாஸ் செய்த சத்தியங்களை தற்போது நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புபடுத்தி அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நடப்பது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
Published on

பாமகவில் இளைஞரணித் தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே பொதுக்குழு மேடையிலேயே மிகப்பெரிய கருத்துமோதல் வெடித்துள்ளது. தன்னுடைய மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்த நிலையில், மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் அன்புமணி.

clash between anbumani and ramadoss
அன்புமணி, ராமதாஸ்pt

இந்தநிலையில், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது, மருத்துவர் ராமதாஸ் செய்த சத்தியங்களை தற்போது நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புபடுத்தி அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நடப்பது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'அதானி ஊழல் சிபி ஐ விசாரனை நடத்த வேண்டும், மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது மேடையில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதற்கு, ராமதாஸின் மகனும், பாமகவின் தலைவருமான அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

பாமக-பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல்
அன்புமணி - ராமதாஸ்.png

மேடையில் பேசிய, அன்புமணி “கட்சியில் சேர்ந்த 4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பது என்ன நியாயம்? அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு?” எனக் காட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதனை கேட்டு கடுப்பான, ராமதாஸ், “நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியேசெல்லுங்கள் வெளியே போ” என ஆவேசமாக கூறினார். உடனே குறுக்கிட்ட அன்புமணி “நீங்கள் சொல்லுங்கள். பண்ணுவதை பண்ணுங்கள்” என தொடர்ந்து பேசினார். இருவரின் வார்த்தை மோதலால் மேடையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸ் செய்த 3 சத்தியங்களும், ஒரு உப சத்தியமும்!

அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களின் உரிமைகளுக்காக பல சங்கங்களை, தலைவர்களை ஒருங்கிணைத்து 1980-ல் வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். அப்போது மூன்று சத்தியங்களையும் செய்தார். அவை,

  1. எந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்!

  2. எந்தக் காலகட்டத்திலும் நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்!

  3. எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட்டேன்!

என மூன்று சத்தியங்கள் செய்தார். உப சத்தியமாக, “என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள். இவை என் இறுதி மூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

பாமக-பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல்
பாமக பொதுக்குழு

தனது மகனும் மருத்துவருமான அன்புமணி ராமதாஸை கட்சிப் பொறுப்புகளுக்குக் கொண்டு வந்தபோது, அவரின் சத்தியத்தை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில், தன்னுடைய மகள் வழிப் பேரனான, முகுந்தனை இளைஞரணிப் பொறுப்புக்கு தற்போது முன்மொழிந்திருக்கிறார். இதனால் 1980-ல் மருத்துவர் ராமதாஸ் செய்த சத்தியத்தைக் குறிப்பிட்டு அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, அவரது மகனான அன்புமணியே வெளிப்படையாக விமர்சித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com