'சாவடிங்கடா.. என கொலைமிரட்டல்' - ஜெயக்குமார் வழக்கில் ஜாமீன் மனு விசாரணையில் நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். ஜெயக்குமார் கொலை முயற்சி, தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளை காவல்துறை கூடுதலாக சேர்த்தது.
கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அரை நிர்வாணமாக்கிய இழுத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீசார் வீட்டில் வைத்து கைது செய்து பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமின் வழங்கக்கோரி ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீநான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் இன்று விடுமுறை என்பதால் 16-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் ஒரு பொறுப்பு பணி பார்ப்பதால் தான் விசாரிக்க இயலாது என மறுத்தார்.
இதையடுத்து ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழக அரசின் முன்னாள் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், செல்வம், இன்பதுரை ஆகியோர், ஜார்ஜ்டவுன் குற்றவியல் நீதிமன்றங்களின் நிர்வாக பொறுப்பாக இருக்கும் 3-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தவுலத்தம்மாளிடம் விசாரணைக்கு எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர். 16-வது மாஜிஸ்திரேட் தயாளன் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதன் பிறகு தான் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்காக ஜெயக்குமாரை பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டதாக ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் தயாளன் உத்தரவிட்டார். அப்போது ஜெயக்குமார் சில கருத்துக்களை கூறினார். அதனை பதிவு செய்வதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
சிறையில் முதல் வகுப்பு தரப்பிடவில்லை என ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் செல்வம் வாதத்தை முன்வைத்தார். முதல் வகுப்பு தர உத்தரவிட்டும் ஏன் தரப்பிடவில்லை என வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக சிறைத்துறையிடம் விளக்க கேட்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்து உத்தரவிட்டார். இதன் பிறகு ஜெயக்குமாரை போலீசார் பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஜெயக்குமார் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறினார். உறவினர்கள் ஜெயக்குமாருக்கு கறுப்பு பிளாஸ்டிக் கவர் ஒன்றில் பிரட் பாக்கெட்டுகளை கொடுத்தனர். ஆனால் அதனை வாகனத்தில் இருந்த காவல்துறையினர் வெளியே தூக்கி வீசி விட்டனர்.
இதன் பிறகு முதலாவது வழக்கின் ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது தாக்கப்பட்ட திமுக பிரமுகர் நரேஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்தார். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கூறி ஜாமீன் வழக்கில் இணைப்பு மனு தாக்கல் செய்தார்.
ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான முன்னாள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் எனவும், புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை என வாதிட்டார்.
பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளனர் என்றும் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சியாகும் என்பதால் தான் இந்த வழக்கை இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307 கொலை முயற்சி என்ற பிரிவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகவல்தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரமும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார். எதன் அடிப்படையில் 506 (2) கொலை மிரட்டல் பிரிவை சேர்த்தார்கள்? கொலை மிரட்டலே இல்லை என்ற போது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார்.
அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தயாளன் தீர்பை மாலைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து மாலை 3 மணிக்கு ஜாமின் மனு மீதான விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பு, ஜெயக்குமார் தரப்பு, பாதிக்கப்பட்டவர் தரப்பு ஆகிய தரப்புகளின் வாதங்களை கேட்ட பிறகு ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ்டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் உத்தரவிட்டார். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.