``என்னம்மா நீயே பேசிக்கிட்டு இருக்க”- குறைகளை சுட்டிக்காட்டிய பெண்ணை அதட்டிய டி.ஆர்.பாலு?

``என்னம்மா நீயே பேசிக்கிட்டு இருக்க”- குறைகளை சுட்டிக்காட்டிய பெண்ணை அதட்டிய டி.ஆர்.பாலு?
``என்னம்மா நீயே பேசிக்கிட்டு இருக்க”- குறைகளை சுட்டிக்காட்டிய பெண்ணை அதட்டிய டி.ஆர்.பாலு?

குறையை சுட்டிக் காட்ட வந்த பெண்ணிடம் 'என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க? சும்மா இரும்மா' என அதட்டியதாக எம்பி டி.ஆர்.பாலு மீது சர்ச்சை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலையில் நடந்து வரும் `பொத்தேரி - கீழ்கட்டளை ஏரி வரையிலான மழைநீர் வடிகால்வாய் பணி’களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் சென்று நேற்று பார்வையிட்டார். இதையடுத்து தாம்பரம் ஐ.ஏ.எப். சாலையில் `அகரம் தென் - ஐ.ஏ.எப். கேட் வரையிலான மழைநீர் வடிகால் பணி’களை பார்வையிட்டார் அவர். பின்னர் டிடிகே நகர், வாணியங்குளம் பகுதிக்கு ஆய்வு செய்ய அமைச்சர் நேரு சென்றார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இருந்தனர்.

அப்போது அதிகாரிகள் அமைச்சர் நேருவிடம், அந்த பகுதியில் மழைநீர் செல்லும் வழி குறித்து படங்களை காட்டியபடி காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு “இதில் செல்லும் மழைநீர் எங்கு வெளியேறும்?” என்று அதிகாரிகளிடம் கேட்டார். அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க முற்படுகையில், அவர்கள் பதிலளிக்கும் முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணொருவர், “அந்த மழை நீரெல்லாம் பின்னால் உள்ள காலி இடத்தில் தான் செல்லும்” என தடாலடியாக அமைச்சர் நேரு முன்னிலையில் எம்.பி டி.ஆர்.பாலுவிடம் போட்டுடைத்தார்.

இதைக் கேட்ட எம்.பி டி.ஆர்.பாலு, “இரும்மா, அவங்க சொல்லட்டும்” என்று அந்தப் பெண்ணிடம் கூறி, பொறியாளர்கள்தான் தனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமெனும் வகையில் பேசினார். இருப்பினும் தொடர்ந்து அப்பெண் தன் தரப்பை சொல்லிக்கொண்டிருக்கவே, “என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க... இரும்மா” என அதட்டலாக சொல்ல, அதற்கு அந்த பெண் “இருங்க சார் ஒரு நிமிஷம். இதை மட்டும் காண்பிச்சிட்டு போயிடறேன்” என கூறிவிட்டு `இதை பாருங்க’ என சொல்லி தன்னுடைய செல்போனில் இருக்கும் சில புகைப்படங்களை அமைச்சரிடம் காண்பிக்க முற்பட்டார்.

மீண்டும் மீண்டும் டி.ஆர்.பாலு, “இரும்மா, இங்க பேசிட்டிருக்கோம்” என்று கூற, அப்பெண்ணும் தொடர்ந்து புகைப்படத்தை காட்டியே தீர்வேன் என அமைச்சர் நேருவிடம் காண்பிக்க முயன்றார். இதனால் டி.ஆர்.பாலு, “அதெல்லாம் பார்க்க மாட்டாரு இப்போ” எனக்கூறி அமைச்சர் நேருவின் கைகளை இழுத்துவிட்டு, தொடர்ந்து அப்பெண்ணிடம் “கொஞ்சம் இருங்கம்மா. அதைப்பேசத்தானே அதிகாரிகள் வந்திருக்காங்க” என்று தொடர்ந்து கூறிவந்தார். 

என்ன ஆனாலும், ஃபோட்டோவை காட்டியே தீருவேன் என அப்பெண் தொடர்ந்து பேசி வந்தார். அங்கிருந்த பிறரும் அப்பெண்ணை தடுக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண் தனது மொபைலில் ஃபோட்டோவை காண்பித்து, அமைச்சர் நேருவிடம் “முந்தைய மழையில் நீங்கள் நிற்கும் இடத்தில் மழை நீர் தேங்கிய புகைப்படங்களை பாருங்கள்” என்றார்.

இக்காட்சிகளைப் பார்த்த அங்கிருந்த பொறியாளர்கள் மற்றும் சிலர் இணைந்தபடி, “இவற்றையும் நாங்கள் அமைச்சரிடம் ஏற்கெனவே காண்பிச்சிட்டோம். மறுபடியும் ஏன் அதையே காட்றீங்க? சொன்னா புரிஞ்சுக்கோங்க. இதையெலாம் காட்டிட்டோம்” எனக்கேட்டனர். எம்.பி டி.ஆர்.பாலுவும் அதையே அப்பெண்ணிடம் வலியுறுத்தினார். அதைக்கேட்ட அப்பெண், “அந்த மழைநீர் தேங்கிய படத்தையும், பொறியாளர்கள் ஏன் வரைபடத்தோடு உங்களுக்கு போட்டுக்காட்டவில்லை” என கேள்வி எழுப்பினார். பின் அங்கிருந்து அவர் நகர்ந்து சென்றார்.

பின்னர் பொறியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இருப்பினும் டி.ஆர்.பாலு அப்பெண்ணை பேசவிடாமல் தடுத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com