வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றபோது ஷூ கம்பெனி பெண் ஊழியர் மீது தூண் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளுவர் மாவட்டம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி ராணி (40). இவர், போரூரில் உள்ள ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ராணி வீட்டு மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக சென்றார். அப்போது காய்ந்த துணிகளை வேகமாக எடுத்தபோது தூணில் கட்டப்பட்டிருந்த கயிறு இழுத்ததால் தூண் பெயர்ந்து ராணி மீது விழுந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராணியை மீட்டு சிகிச்சைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கேகே நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவம் நடந்த சிறிய அடுக்குமாடி குடியிருப்பில். 6 வீடுகள் இருக்கிறது. மாடியில் மேலும் ஒருமாடி கட்டுவதற்காக தூண் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. இதில் அங்கு வசிப்பவர்கள் பழமையான தூணிலேயே கயிறை கட்டி துணி காயப்போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே பெயர்ந்து இருந்த தூணில் கட்டியிருந்த கயிறை இழுத்தபோது தூண் இடிந்து ராணி மீது விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.