இராமநாதபுரம்: இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை ராட்சத திமிங்கலம்
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் கொடுத்த தகவலின் படி நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள், திமிங்கலத்தைப் பிரேதப்பரிசோதனை செய்து புதைத்தனர்.
கடந்த ஜூன் மாதமும் அங்கு இதே போன்று 18 அடி நீளம் கொண்ட ஒற்றைக்கால் ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கடற்கரையில் வைத்தே திமிங்கலத்தைப் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி சதிஷ் கூறும் போது “ இந்த அரிய வகை திமிங்கலங்கள் பால்க் பே மற்றும் வளைகுடா பகுதிகளில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த 4 வருடத்தில் வெறும் நான்கு திமிங்கலங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.
மேலும் அவர் கூறும் போது 1972 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சட்டத்தின் படி இவ்வகையான திமிங்கலங்களை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மீறுபவர்களுக்கு 3 முதல் 7 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரேத பரிசோதனையின் இறுதியின் அறிக்கையின் மூலம் திமிங்கலம் இறந்ததற்கான காரணம் தெரியவரும்” என்றார்
ஆழம் குறைவான பகுதியில் வாழும் இவ்வகையான அரிய வகை திமிங்கலங்கள், உணவுக்காகவும், எண்ணெய்க்காகவும் வேட்டையாடப்படுகின்றன.