‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை
தமிழகத்தில் அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளை திமுக வென்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்திய அளவில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 350 இடங்களை பெற்று அபார வெற்றியை அடைந்தது. அதனை எதிர்த்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 38 இடங்கள் அடங்கும். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் திமுக என்று புகழப்படுகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து இடங்களிலுமே அதிமுக தோற்றுவிட்டது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியுள்ளதுதான். அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிரையே கரூர் தொகுதியில் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி 30 வருடங்களுக்கு மேலாக அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சியாக போட்டியிட்ட பாமக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சரித்திர தோல்வி அடைந்தது. இதற்கெல்லாம் மேலாக முதலமைச்சர் பழனிசாமியின் சொந்தத் தொகுதியான சேலத்திலேயே திமுக 1.46 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை வெற்றியை பெற்றது.
அதுமட்டுமின்றி பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய இடங்களிலும் அதிமுக பெரும் தோல்வியடைந்தது. தருமபுரியில் முன்னாள் எம்.பி-யான அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தப் பெரும் தோல்வியால் மக்களவைத் தேர்தலில் இத்தனை காலங்களாக அதிமுகவின் கோட்டை எனப்பட்ட இடங்களிலேயே திமுக அபார வெற்றியை ஈட்டியுள்ளது.