மேற்குவங்கம் டூ கோவை: கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட 13 டன் தேயிலை கழிவுகள் அழிப்பு!
செய்தியாளர்: பிரவீண்
வடமாநிலங்களில் இருந்து கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு தேயிலை கழிவுகள் கொண்டுவரப்படுவதாகவும், தரமான தேயிலை தூளுடன், தேயிலை கழிவுகளை கலந்து கலப்பட தேயிலை தயாரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாகவும் தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் இவற்றை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 13,600 கிலோ தேயிலை கழிவுகளை துடியலூர் அருகே, தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் நேற்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அதை துடியலூர் அருகில் உள்ள குடோனுக்கு கொண்டு சென்று அந்த தேயிலை கழிவுகளை இறக்கி பரிசோதித்தனர். அப்பொழுது அவை தரம் குறைந்த தேயிலை கழிவுகள் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தேயிலை கழிவுகளை குழி தோண்டி, அவற்றுடன் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து பூமியில் புதைத்தனர். வடமாநிலங்களில் இருந்து தேயிலை கழிவுகளை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.