முழு ஊரடங்கு எதிரொலி: கோயில் வாசலில் யூட்யூபில் மேளதாளம் ஒலிக்க நடைபெற்ற திருமணங்கள்

முழு ஊரடங்கு எதிரொலி: கோயில் வாசலில் யூட்யூபில் மேளதாளம் ஒலிக்க நடைபெற்ற திருமணங்கள்
முழு ஊரடங்கு எதிரொலி: கோயில் வாசலில் யூட்யூபில் மேளதாளம் ஒலிக்க நடைபெற்ற திருமணங்கள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே திட்டமிட்ட திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கிய காரணத்தால் பல இடங்களில் சாலைகளில் திருமணம் நடத்தப்பட்டன. கோயில்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களில் திருமணம் செய்ய நினைத்தவர்கள் கோயிலின் வீதிகளில் திருமணம் செய்து கொண்டனர்.

அந்தவகையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் இன்று நடைபெற்றது. வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடப்பட வேண்டும் என்ற காரணத்தால் கோயிலுக்கு உள்ளே அனுமதி இல்லாத காரணத்தினால் அனைத்துத் திருமணங்களும் சாலையில்தான் நடத்தப்பட்டது. திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை அதனடிப்படையில் கோயில் எதிரில் உள்ள சாலையில் அதிகளவு திருமணங்கள் நடைபெற்றது.

சாலையில் நடந்த இந்த திருமணங்கள் பெரும்பாலும் மேளதாளங்கள் இல்லாமல் கைத்தட்டல்கள் மற்றும் மொபைல் போனில் யூடியூபில் மேளக்கச்சேரி போட்டு தாலிகட்டும் நிகழ்வு நடத்தப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் குறைந்த அளவு உறவுகள் அழைத்து மிக எளிமையான முறையில் சாலையில் நடந்த இந்த திருமணங்களில் மேளதாளங்கள் இல்லாததால் யூடியூபில் மேளக்கச்சேரி போட்டு தாலி கட்டிய நிகழ்ச்சி அங்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியது.


இதேபோல திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலும் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால் இன்று முழு ஊரடங்கு என்பதால் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் குறைந்தளவு உறவினர்களைக் கொண்டு எளிய முறையில் பிற நாள்களைவிடவும் குறைவான திருமணங்கள் நடைபெற்றது.

இதேபோல திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முருகப்பெருமான் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் திருமணங்கள் இப்படி நடந்தன. இருப்பினும் அங்கே திருமணங்கள் கோயிலுக்கு உள்ளேவும் நடத்தப்பட்டன. ஏற்கெனவே மலைக்கோயிலில் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கப்பட்ட திருமணங்கள் மட்டும் அப்படி நடைபெற்றது. இத்திருமணங்கள் யாவும், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. இதற்காக மலைக்கோவில் திருமண மண்டபத்தில் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் நகரில் அமைந்துள்ள ஏராளமான திருமண மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்து திருமணங்கள் நடைபெற்றது. அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில் வாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com