சசிகலாவின் முயற்சிகளில் உறுதுணையாக இருப்போம் – பண்ருட்டி ராமச்சந்திரன்

திமுக அணிக்கு யாருடைய தயவும் தேவையில்லை, அவர்கள் வலுவாக இருக்கிறார்கள்.
Ramachandran
Ramachandranpt desk

சென்னை பசுமை வழி சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்...

சென்னை உயர்நீதிமன்ற அமர்வில், இடைக்கால தடையை அந்த அமர்வு ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவர்கள் இருக்கின்ற நிலையை அடிப்படையாக வைத்து ஓர் முடிவை அறிவித்துள்ளார்கள். அவர்களாகவே எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகையால் இந்தத் தீர்ப்பை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ஈரோடு கிழக்கு தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் தரப்பட்டது போல, கர்நாடக தேர்தலில் தற்காலிகமாக தரப்பட்டுள்ளது. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Election Commission
Election CommissionFILE PICTURE

சட்ட விதிகள் மற்றும் நிர்வாகிகளை பொறுத்தவரை தேர்தல் ஆணையம், தனது கருத்துகளை தெளிவுபடுத்த நீதிமன்றத்தில் இருந்து இறுதி தீர்ப்பு வரும் வரை நாங்கள் இதை பதிவு செய்துள்ளோம். ஆகையால் இதை ஒரு பெரிய பிரச்னையாக கருத வேண்டியதில்லை.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் எங்கள் சின்னத்தை அறிவிப்பதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. நீதிமன்றங்கள் ஆனாலும், தேர்தல் ஆணையங்கள் போன்ற அமைப்புகள் ஆனாலும் மேலோட்டமாகவே தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பிரச்னைகளில் இதுவரை நமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

OPS AND EPS
OPS AND EPSFile Picture

அதற்கு உதாரணம், தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டவிதி. ஆனால், எடப்பாடியின் தரப்பினர் பொதுக் குழுவுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என விவாதிக்கின்றனர். தொண்டர்களின் முடிவில் பொதுக்குழு தங்களது கருத்துகளை வைக்கக்கூடாது என புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எழுதி வைத்துள்ளார்.

பல அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு தேடி நீதிமன்றங்களின் நெடிய படிகளை ஏறி ஏறி கால் அசந்து விட்டது. ஆகையினால் வரும் 24ஆம் தேதி திருச்சியில் மக்கள் மன்றத்தை தேடி மாநாடு நடத்துகிறோம். அடிப்படைத் தொண்டர்களுக்கு சம்பந்தமே இல்லாத நிர்வாகிகள் ஒரு கட்சி நடத்த முடியுமா. தொண்டர்களுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லாத கட்சி, 2000 நபர்களைக் கொண்டு நாங்கள் தான் கட்சி என்று கூறினால் இதை எதிர்த்து தொண்டர்களிடமும் மக்களிடமும் சென்று முறையிட வேண்டாமா?.

இரட்டை இலை
இரட்டை இலைFILE PICTURE

உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தேர்தல் ஆணையத்தின் கருத்துகளும் கட்சியின் பின்னடைவாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக திருச்சி மாநாட்டில் தெரியவரும். திருச்சி மாநாட்டிற்கு டிடிவி.தினகரனை அழைத்தால் மற்ற தோழமை கட்சிகளையும் அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே டிடிவி.தினகரனை அழைக்க வாய்ப்பில்லை.

2024 தேர்தலுக்குள் சசிகலா, இரு தரப்பினரையும் ஒன்று சேர்த்து விடலாம் என நம்பிக் கொண்டிருக்கிறார். அந்த சூழ்நிலையில் அவரை மாநாட்டுக்கு அழைப்பது சரியாகாது, அழைப்பை ஏற்று வருகை தந்தால் நடுநிலை தவறியதாகவும், அழைப்பை ஏற்காவிட்டால் எங்கள் வேண்டுகோளை நிராகரித்து விட்டதாகவும் ஆகும், அது அவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும், எனவே சசிகலா எடுக்கும் முயற்சியில் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

Supreme Court
Supreme CourtFile Picture

நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். அதுமட்டுமல்லாமல் எது நடந்தாலும் அதற்கு எங்களை தயார் படுத்திக் கொள்வோம் என்னை பொறுத்தவரை திமுக அணிக்கு யாருடைய தயவும் தேவையில்லை, அவர்கள் வலுவாக இருக்கிறார்கள். இது என்னுடைய கணிப்பு என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com