இந்தியா வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியா வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
இந்தியா வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க தனி பிரிவு வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் செயல்படும் தனி பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பல வெளி நாட்டினர், ஜாமீன் கோரியும், முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

விசா காலம் முடிந்த வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அவற்றை மாநில அரசுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார். விசா காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதி, வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா வரும் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட தகவல்களை பதிவு அலுவலகங்கள், மாநில காவல் துறைக்கு வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com