"சென்னை மழையால் பாதிக்கப்பட்ட 5,987 பேரை மீட்டுள்ளோம்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 6 ஆயிரம் பேரை காவல்துறையினர் மீட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய 13 காவல் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் சூழ்ந்துள்ள மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை கூறியிருக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட 5 ஆயிரத்து 987 பேர் முகாம்களில் இருப்பதாக காவல்துறை கூறியிருக்கிறது.