"உலகில் எங்கிருந்தாலும் வந்துருவோம்"-சமத்துவ பொங்கல் கொண்டாடும் புதுக்கோட்டை கிராம மக்கள்!

"உலகில் எங்கிருந்தாலும் வந்துருவோம்"-சமத்துவ பொங்கல் கொண்டாடும் புதுக்கோட்டை கிராம மக்கள்!
"உலகில் எங்கிருந்தாலும் வந்துருவோம்"-சமத்துவ பொங்கல் கொண்டாடும் புதுக்கோட்டை கிராம மக்கள்!

மெய்வழிச்சாலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக 69 ஜாதி, மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்தனர்.

இன்றைய நவ நாகரீக நடைமுறை வாழ்வில் சமத்துவம் என்ற வார்த்தையின் தேவை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதன் விளைவாகத்தான் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாக்கள் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் நோக்கம் ஜாதி மதங்களை கடந்து அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காகவே சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

69 ஜாதி, மதங்களை சேர்ந்த 3000 மக்கள் ஒன்று சேர்ந்து!

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் 69 ஜாதி மத சமூகங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாகுபாடுகளை களைந்து அந்த கிராமத்தில் அமைந்துள்ள பொன்னரங்க தேவாலய வளாகத்தில் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் இறைவனை வழிபடுகின்றனர். இதையடுத்து அந்த பொன்னுரங்க தேவாலயத்தின் சாலை வர்க்கவான் தீர்த்தம் கொடுத்து தீபம் காட்டியதும் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி..

அப்போது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் குறித்த பாடல்கள் பாடப்படுவதோடு உருமி உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து அந்த ஆலயத்தை சுற்றி வளம் வந்து பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது. அனைவரும் பொங்கல் வைத்து முடித்த பின்பு மீண்டும் அந்த பொங்கல் பானைகள் பொன்னுரங்க தேவாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அனைத்து பொங்கல் பானையில் இருந்தும் சிறிது சிறிது பொங்கல் எடுக்கப்பட்டு அதனை ஒரே படையலாக படைத்து பிரார்த்தனை செய்து பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் ஜாதி சமூக மத பாகுபாடின்றி அனைத்து மக்களும் அண்ணன் தம்பியாய் சகோதர பாசத்துடனும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடனும் அதே வேளையில் தமிழர்களின் பாரம்பரிய நடைமுறைகளை கைவிட்டு விடாமல் அவற்றை அப்படியே பின் தொடர்ந்தும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இந்த கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில், இதுவரையில் நவீன நாகரீக வசதிகள் எதையும் அவர்கள் பயன்படுத்தாமல் மின்சாரத்தை தவிர்த்து குடிசையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் பொருத்தப்படுவதில்லை தரைத்தளம் அமைக்கப்படுவதில்லை. தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த பொழுதுபோக்கு வசதிகளையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. பாரம்பரியமாக தங்கள் முன்னோர் காட்டிய சமத்துவமான வழியில் பயணிக்கும் அவர்களின் சில குடும்பங்கள் பணியின் காரணமாக வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் அனைவரும் இன்றைய பொங்கல் தினத்தன்று இந்த மெய்வழிச்சாலையில் உள்ள பொன்னரங்க தேவாலயத்தில் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபாடு நடத்த வருவார்கள்.

ஒரு நூற்றாண்டு பின்னோக்கி நடைபெறும் தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விழா 

இந்த விழாவை காணும் போது ஒரு நூற்றாண்டு பின்னோக்கி நடைபெறும் தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விழா போலவே இந்த பொங்கல் விழா பிரதிபலிக்கிறது. இதுகுறித்து மெய்வழிச் சாலையில் சமத்துவமான பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடிய மக்கள் கூறுகையில்...

மதங்களைக் கடந்து அனைவரையும் மனிதர்களாக நேசிக்க வேண்டும் என்ற நோக்கோடு மெய்வழிச்சாலை கிராமத்தில் 69 ஜாதி மத சமூக மக்களைச் சேர்ந்தவர்கள் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய் மதம் என்ற ஒரு மதத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக இந்த பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி காலங்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறோம். நாங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாட்டோம். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கார்த்திகை திருநாள் புரட்டாசி மாத காய்கறி திருவிழா வைகாசி திருவிழா உள்ளிட்ட திருவிழாவை மட்டுமே கொண்டாடுவோம்.

அதிலும் பொங்கல் பண்டிகை தான் பிரசித்தி பெற்றது இன்று நடைபெற்ற இந்த பொங்கல் பண்டிகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கனடா என பணிநிமித்தமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்துள்ளனர். இங்கிருக்கும் மக்கள் எந்த நாடுகளில் எந்த மாவட்டங்களில் எந்த மாநிலங்களில் இருந்தாலும் பொங்கல் அன்று இங்கு வந்து விடுவோம் என்றும் கூறினார்.

எல்லாவற்றிற்கும் முன்னோடி எங்கள் கிராமம்!

ஜாதி மத பேதத்தை களைய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, சமத்துவபுரம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக எங்கள் கிராம மக்கள் 80 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி மதங்களை கடந்து மனிதநேயத்தோடு நல்ல மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்குள் இதுவரை எந்தவிதமான ஜாதி பாகுபாடுகள் இருந்ததில்லை. சமீபத்தில் கூட புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதிய பாகுபாடு பிரச்னை அனைவருக்கும் மன வேதனையை ஏற்படுத்தி இருந்தாலும் எங்கள் கிராமத்தில் நடைபெறும் உண்மையான இந்த சமத்துவ பொங்கல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இது ஒட்டுமொத்த உலகிற்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக தெரிவித்தனர்.

எங்கள் பேரப்பிள்ளைகளும் இதையே கடைபிடிப்பார்கள்!

நான்கு தலைமுறைகளை கடந்து தாங்கள் இந்த விழாக்களை இன்றளவும் கடைப்பிடித்து வருவதாகவும் தங்களுக்கு பின்னாலும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் இதேபோல் இதே நடைமுறையை கடைப்பிடிப்பார்கள் என்றனர். வெளிநாடுகளில் வசித்தாலும் தங்களது குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அதன் சமத்துவத்தின் உன்னதத்தையும் அதன் புனிதத்தையும் புகட்டி வளர்த்து வருகிறோம். இதே போல் அனைத்து மக்களும் மனதளவில் மாறினால் உண்மையான சமத்துவம் உலகில் எட்டு எனவும் தெரிவித்தனர்.

சமத்துவம் குறித்து வார்த்தைகளால் பேசி பெயரளவில் பொங்கல் விழாக்கள் நடத்தும் இன்றைய சமூகத்தினருக்கு மெய்வழிச்சாலையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி மத சமூக பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒற்றுமையோடு சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இன்றைய பொங்கல் விழாவை கொண்டாடி இருப்பது போற்றுதலுக்கு உரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com