“முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டோம்”- ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டோம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான் இப்போது அந்தக் கூட்டணியில் எழுந்துள்ள பெருத்த விவாதமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, தேர்தலுக்கு பின்பே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கிறது.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது:-
“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியதை மனதார வரவேற்றேன். தற்போது அவர் உடல்நிலையை காரணங்காட்டி அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். எனது தேர்தல் பரப்புரையை உரிய நேரத்தில் உரிய முறையில் துவக்குவேன்” எனத் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் தான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியது தொடர்பான கேள்விக்கு “முதல்வர் வேட்பாளர் தொடர்பான கருத்தை ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி விட்டோம்” என்று அவர் பதிலளித்தார்.