சென்னையை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் கூறுபோடப்பட்டு அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நிலத்தடி நீர் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையின் தாகம் தணிக்க நாளொன்றுக்கு ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. இதில் 480 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான நகரவாசிகள் தினமும் தண்ணீர் பிரச்னையுடனே தங்களது நாளை தொடங்குகின்றனர். இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சிலர், சென்னையை சுற்றியுள்ள அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், போரூ்ர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற புறநகர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். தவிர ஒரு லாரி தண்ணீரை 2 ஆயிரத்து 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர். தண்ணீர் திருட்டுக்கு மாவட்டத்திலுள்ள அரசு உயரதிகாரிகள் ஆதரவு அளிப்பதாக லாரி ஓட்டுநர்கள் பேசிக் கொண்டாலும், அது எந்த அளவுக்கு உண்மை என்பது முழுமையாக விசாரிக்கப்பட்டால் மட்டுமே தெரியவரும். எனினும் அதிகாரிகளின் உறுதுணை இல்லாமல் இப்படி தண்ணீரை உறிஞ்ச முடியாது என்பது மட்டும் நிதர்சனம். புறநகர் பகுதிகளில் அனுமதி இல்லாமல் உறிஞ்சப்படும் தண்ணீரால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்திடி நீர் மட்டும் வேகமாக குறைவதுடன், கடல் நீரும் உட்புகும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.