முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கருதப்படும் குமுளி, தேக்கடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர் மழை பெய்து வருகிறது. இரவிலும் பெய்த மழை இன்று காலையிலும் தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைப்பகுதியில் அதிகபட்சமாக 55 மில்லி மீட்டர், தேக்கடியில் 38 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதனால் அணையின் நீர்மட்டம் 124.30 அடியில் இருந்து 124.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 676 கன அடியில் இருந்து 905 கன அடியாக அதிகரித்தது. இன்று அந்த நீர் வரத்து விநாடிக்கு 1,134 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்காக குமுளி மலையின் இரைச்சல்பாலம் வழியே விநாடிக்கு 218 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 3,568 மில்லியன் கன அடியாக உள்ளது. தொடர்மழையால் தமிழகம் மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.