தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை மற்றும் கடனா அணை ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் 544 கன அடியாக இருந்த நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 4 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், அணை நீர்மட்டம் இரண்டு நாட்களாக 122 அடியாகவே காணப்படுகிறது. இந்நிலையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் கடனா அணையின் நீர் மட்டம் 81 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை வேகமாக நிரம்புவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து உபரி நீர் மறுகால் வழியாக எப்போது வேண்டுமானாலும் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் கடனா ஆற்றில் வெள்ளம் அபாயம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தேவதானம் பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக பயிர்கள் நீரின்றி கருகுவதாகவும், இதனால் பெருமளவில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று சாஸ்தா அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையால் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.