சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம் - கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம் - கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடு
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம் - கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள ஏற்பாடு
சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க, துணை ஆணையர் தலைமையில் வார் ரூம் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா மூன்றாவது அலை இம்மாத இறுதியில் பரவ ஆரம்பிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி 1,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே சென்னையில் விதிகளை மீறி மக்கள் கூடும் 9 இடங்களில் பத்து நாட்கள் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் அதிகம் கூடிய 7 டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது அலை பரவாமல் இருக்கவும் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறையை துவக்கியுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் செயல்படத் துவங்கியுள்ளனர்.
அதன்படி சென்னை பெருநகர காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களை சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்று தொற்று பரவலை கண்டுபிடிக்க களமிறங்கியுள்ளனர்.
இந்த வார் ரூம்மில் பணிபுரியும் காவலர்கள் கணினி செயல்பாடுகளிலும் மற்றும் சைபர் தொடர்பான விபரங்கள் பற்றி தெரிந்தவர்களாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியிடம் இருந்து தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்று , அவர்கள் கடந்த 15 நாட்கள் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என்ற அழைப்புகள் தொடர்பான தகவல்களை டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பெற்று, அதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ,கடந்த 15 நாட்களில் எந்தெந்த இடத்திற்கு சென்றுள்ளார் என்ற தகவல்களையும் பெற்று கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கொரோனா அதிகம் பரவும் இடங்களை அடையாளம் காணவும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும் உதவியாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையை சென்னை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com