எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்தால் சன்மானம்.. மதுரையில் போஸ்டர்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்தால் சன்மானம் வழங்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது மத்திய அரசு. அதன்படி 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி. அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.5 கோடி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு ஜனவரியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் நடுவே கொரோனா வந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றால் மதுரை எய்ம்ஸ் வெறும் கனவாக போய்விடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என மதுரை நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. எங்கய்யா எய்ம்ஸ்? என்ற வாசகத்துடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட அடிக்கல்நாட்டு விழாவின் புகைப்படத்துடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மதுரையின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.