கடலில் கலந்த எண்ணெய் மாசு... அகற்ற குவிந்த தன்னார்வலர்கள்...
இளைஞர்கள் என்றாலே எப்போதும் மொபைலும், கையுமாகத்தான் இருப்பார்கள், எந்தவொரு சமூக அக்கறையும் அவர்களுக்கு இருக்காது என்ற பொதுவான பேச்சை அவர்கள் தொடர்ந்து முறியடித்துக் கொண்டே வருகின்றனர்.
சென்னை வெள்ளம், வர்தா புயல் என அனைத்திலும் ஒன்று கூடி இளைஞர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் உபயோகமாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் வந்தது.
அண்மையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு இளைஞர்கள் ஒன்றுகூடியது போல், தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கான பணியில் தன்னார்வலர்கள் கைகோர்த்துள்ளனர். எங்களின் இயற்கை வளமான கடலில் ஒரு கழிவு என்றால் அதனை அகற்றுவதும் எங்களது பொறுப்புத்தான் என பொறுப்புடன் அவர்கள் இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
மோதியது கப்பல்
கடந்த மாதம் 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய்க் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கடலில் கசிந்து கடற்பரப்பு முழுதும் பரவியது. தற்போது எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய்ப் படலம் பரவி கடல் மாசுபட்டுள்ளது. இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யமுடியவில்லை என்பதால் கடலோர காவல் படையினர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பக்கெட் கொண்டு கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்து வருவதால் 7 நாட்கள் ஆகியும் எண்ணெய் படலம் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
கூடிய தன்னார்வலர்கள்
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு இளைஞர்கள் ஒன்றுகூடியது போல், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்று சேர்ந்த தன்னார்வலர்கள், கடலில் கலந்துள்ள எண்ணெய் மாசுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டு நிறுவனம் மூலம், சமூக வலைத்தள பக்கத்தில், கடலில் கலந்துள்ள எண்ணெய் மாசுக்களை அகற்றுவதற்காக ஆட்கள் கோரப்பட்டது. இதனையடுத்து எண்ணற்ற தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடலில் கலந்துள்ள எண்ணெய் மாசுக்களை அகற்றி வருகின்றனர்.
எதிர்பார்ப்பில்லாமல் பணி
சூரியன் உதயமாகும் போதே கடற்கரை பகுதிக்கு வரும் இளைஞர்கள் கடலில் கலந்துள்ள மாசுக்களை அகற்றும் பணிகளை தொடர்கின்றனர். இரவு 7 மணி வரை இப்பணி தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்குகிறது. இருப்பினும் அதிகப்படியான தன்னார்வலர்கள் வருவதால் பாதுகாப்பு உபரகரணங்களை ஏற்பாடு செய்து கொடுப்பதில் சிறிது சிரமம் காணப்படுகிறது. இதனை உணர்ந்த தன்னார்வலர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை தாங்களே கொண்டு வந்து சுத்தம் செய்கின்றனர். எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கான பட்கெட்டுகளையும் அவர்களே வீட்டிலிருந்து கொண்டு வந்து விடுகின்றனர்.
தொய்வில்லா பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
மழை, புயல் என எது வந்தாலும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஓய்விருக்காது. வழக்கமான நாட்களை விட, இத்தகைய நாட்களில்தான் அவர்களுக்கு அதிப்படியான பணி இருக்கும். இரவு பகல் பாராமல் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் கலந்துள்ள எண்ணெய்க் கழிவால் யாரும் இப்போது மீன் வாங்க முன்வருவதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வேதனையான சூழ்நிலையிலும் கூட, மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் கடலை சுத்தமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை வளங்களைக் காப்பதிலும், பாராம்பரியத்தை நிலைநாட்டுவதிலும், இளைஞர்களின் ஆர்வம் பெருமைக்குரியதே.