திருச்சி: டயல் செய்தால் கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி இலவச உணவளிக்கும் தன்னார்வ அமைப்பு

திருச்சி: டயல் செய்தால் கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி இலவச உணவளிக்கும் தன்னார்வ அமைப்பு

திருச்சி: டயல் செய்தால் கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி இலவச உணவளிக்கும் தன்னார்வ அமைப்பு

டயல் செய்தால் கொரோனா நோயாளிகளுக்கு 14 நாட்கள் வீடு தேடி இலவசமாக உணவு வழங்குகிறது திருச்சியை சேர்ந்த  தன்னார்வ அமைப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல விதமான முறைகளில் பல்வேறு அமைப்பினரும் உதவி செய்து வருகின்றனர். அவ்வகையில் களஞ்சியம் ஃபுட் பேங்க் தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் UPPERROOM CAFE & BAKES உணவகமும் இணைந்து கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்க கோவிட் கேர் அட் திருச்சி (COVID CARE AT TRICHY) என்ற பெயரில் உதவிட முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து UPPERROOM உணவகத்தின் உரிமையாளர் சூசன் ஜெயராஜ் கூறுகையில், ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்றிலிருந்து தொடங்கியுள்ளோம். உணவு தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது, அவர்களுக்கு அடுத்த 14 நாட்களுக்கு தேவையான உணவை நாங்களே அவர்களுடைய வீடுகளுக்கு தேடிச்சென்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவமனையிலேயே உணவு வழங்கிடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும்போது உணவினை வீட்டின் வாசலிலேயே வைத்து விட்டு வருவதாகவே முடிவு செய்துள்ளோம். ஏனெனில், பாதிக்கப்பட்டவருக்கும் உணவினை எடுத்து செல்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இதனை மேற்கொள்ள இருக்கிறோம்.

இதன் தொடக்க நிகழ்வாக இன்றைக்கு அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவளித்துள்ளோம். மதிய உணவில் சத்தான உணவாக இருக்க வேண்டும் என்பதற்காக சைவ முறையில் ஒரு வெரைட்டி ரைஸ் மற்றும் ஒரு காய்கறியை கூட்டு அல்லது பொரியல் ஆக சேர்த்து அளிக்கிறோம்.

நோயாளிகளுக்கு காலை உணவும் 500 நபர்களுக்கு கொண்டைக்கடலை போன்ற சத்து நிறைந்த பொருட்களையும் மாலை நேரத்தில் தரும்படி கேட்டுள்ளனர், அதனை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். கண்டெயின்மெண்ட் சோன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எங்களுக்கு ஆர்டர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் திருச்சியில் எப்பகுதியில் இருந்து ஆர்டர் செய்தாலும் அவர்களுக்கு உணவினை கொண்டு சேர்க்கும் விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும், அதே நேரம் அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவுகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தானும் தனது உறவினர்களும் நண்பர்களும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டோம்.அப்போதுதான் இந்த எண்ணம் வந்ததாகவும் உடனடியாக மற்றவர்களும் இந்த சிரமத்தை அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில் இப் பணியை துவக்கி உள்ளேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் 5 ஆயிரம் பேருக்கு உணவளித்ததாக சூசன் ஜெயராஜ் கூறினார். 

- வி.சார்லஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com