தேங்கியுள்ள நெல் மூட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் - சசிகலா
மறைந்த தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தோழியான சசிகலா விவசாயிகளின் துயர் துடைக்க ஆட்சியாளர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
“அண்மையில் என்னை சந்தித்தவர்கள் தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து, தற்போது அறுவடை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அப்படி அறுவடை செய்யப்படும் நெல் மணிகள் மூட்டை மூட்டைகளாக மாவட்டங்களின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள காரணத்தினால், மேற்கொண்டு அங்கு நெல் மூட்டைகளை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர். அதனால் விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகளை பாதுக்கப்பின்றி வைத்துள்ளதாகவும், தொடர் மழையினால் அது முளைத்து விட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். அதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனால் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை துரிதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளுக்கான பணமும் விவசாயிகளுக்கு விரைவில் சென்று சேரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்” என சசிகலா தெரிவித்துள்ளார்.
தனது கடிதத்தில் அஇஅதிமுக-வின் பொதுச் செயலாளர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.