“தேர்தலையும் சந்திப்போம்.. கட்டடமும் கட்டி முடிக்கப்படும்“ – விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்க கட்டடம் கோயில் போன்றது என்றும், அதற்கு எதிராக வழக்குகள் தொடர வேண்டாம் என்றும் தெரிவித்தார். விரைவில் தேர்தலையும் சந்திப்போம், நடிகர் சங்க கட்டடமும் திறக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், கூட இருப்பவர்கள் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதாகவும், எங்கிருந்தோ வந்த சிலர் உதவுவதாகவும் வேதனையைபதிவு செய்தார். முன்னதாக சென்னை தி.நகரில் கட்டப்பட்டுவரும் நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான காணொளி அரங்கில் ஒளிபரப்பட்டது. அதன்பின், முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வின் தொடக்கமாக நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டில் உயிரிழந்த 70 கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதி, கட்டடத்துக்கு சூட்டப்பட உள்ள பெயர், சினிமாவில் 50 வருடங்கள் கடந்த ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா என எந்த புது அறிவிப்பும் இல்லாமல், வழக்கமான நிகழ்வாக முடிவடைந்தது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்.