விருதுநகர்: அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
விருதுநகர் அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.
கொரோனோ பரவிய காலத்தில் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் தேவை இன்றியமையாத ஒன்றாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை அதிக அளவில் காணப்பட்டது. கொரோனோ நோயாளிகள் மட்டுமின்றி விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் பிரசவத்திற்கு என பலதரப்பட்ட மக்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பற்றாக்குறை ஏற்படும்போது தனியார் ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக பயன்படுத்தும் வகையில் விருதுநகர் அரசு மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் வெயிலு முத்து தலைமையில், ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.