"கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்" - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை
செய்தியாளர் - மணிகண்டபிரபு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டியில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்ட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த வைரமணி, மகாலிங்கம், புண்ணியமூர்த்தி ஆகியோரின் உறவினர்கள் உடல்களை பெற்றுக்கொண்ட நிலையில், மீதமுள்ள 5 பேரின் உடலை உறவினர்கள் பெற்று கொள்ளவில்லை. அவர்கள் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி வழங்க வேண்டும், ஆலை நிர்வாகம் 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என உடல்களை பெற்றுக்கொள்ளாமல் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் போராட்டத்தின் நடுவே மாவட்ட எஸ்.பி.கண்ணன் போராடியவர்களை நோக்கி “ஒழுங்கா இருக்கணும், இதற்கு மேல் கோஷம் எழுபினால் வேற மாதிரி ஆயிடும், ஒழுங்கா இருக்கணும்” என மிரட்டும் தொணியில் சர்ச்சைக்குரிய வகையில் எச்சரித்தார். ஏற்கனவே பட்டாசு ஆலை விபத்தில் உயிர்களை இழந்து வேதனையில் இருக்கும் உறவினர்களிடம் மாவட்ட எஸ்.பி.கண்ணன் இதுபோல எச்சரிக்கை விடுத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மடப்புரம் இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் உள்ளிட்டோர் காவல் தறை பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ள நிலையில் விருதுநகர் எஸ்பி கண்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களை பெற கீழேயுள்ள வீடியோ காணொளியை பார்க்கவும்..
”மாவட்ட எஸ்பி-யின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன்
இதனிடையே, எஸ்பி கண்ணன் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தமது அறிக்கையில், “சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி போராடிய பொதுமக்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதன் மூலம் பறிபோகும் அப்பாவி உயிர்களையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராடும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே, பொதுமக்களை பார்த்து ”ஒழுங்காக இருந்துக்கோ இல்லைனா வேறு மாதிரி ஆகிவிடும்” என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது தமிழகத்தில் சமூக விரோதிகள் மட்டுமல்ல காவல்துறையினரையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஒருவரே பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும் எனவும், பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட தேவையான அறிவுரையை வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.