விருதுநகர்: விவசாய கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாய கிணற்றில் இருந்து, வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திர ராஜா. இவருக்கு சங்கரன் கோயில் சாலையில் உள்ள கோதை நாச்சியார் புரம் கிராமத்தில் விவசாய கிணறுடன் கூடிய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தளவாய்புரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கிணறு அருகே உள்ள தண்ணீர் தொட்டியை பராமரிப்பதற்காக குத்தகைதாரரான கண்ணன், ராஜபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளார். அவர் இன்று பிற்பகலில் தொட்டியை பார்வையிட வந்தபோது, கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் சடலம் மிதப்பது தெரியவந்தது. இவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு செய்தபோது கிணற்றினுள் தலையின் பின்புறம் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. கிணற்றின் அருகே ரத்த காயமும், தலை முடியும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் வந்த மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி, சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார் என உடனடியாக அடையாளம் காண முடியாததால் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய கிணற்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோதைநாச்சியார் புரம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.