‘அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு இல்லை’ - விருதுநகர் எம்பி குற்றச்சாட்டு

‘அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு இல்லை’ - விருதுநகர் எம்பி குற்றச்சாட்டு
‘அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு இல்லை’ - விருதுநகர் எம்பி குற்றச்சாட்டு

விருதுநகரில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்காமல் அவமதித்துவிட்டதாக அம்மாவட்ட எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், உதகை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் விருதுநகர் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “இன்று மதியம் 3 மணி நடைபெறவிருந்த விருதுநகர் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று மதியம் 12.35க்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டேன்.

2010ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வந்த மருத்துவக்கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். ஏனென்றால் எனக்கு மதுரையில் இருந்து விமானம் 11.40 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எம்பியான தன்னை அவமதித்தது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் தெரிவிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார். தன்னை அவமதிப்பு செய்ததில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு பங்கு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது வெக்கக்கேடான நிகழ்வு என்றும், காமராஜர் மண்ணின் மக்கள் இதை மறக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com