virudhunagar district assembly constituency updates
viruthunagarx page

விருதுநகர் | 7 தொகுதிகள்.. இரு துருவ கடும் போட்டியாருக்கு வெற்றி வாய்ப்பு?

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 7 தொகுதிகளில், கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி 6 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
Published on

'தென் தமிழகத்தின் தொழில் நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது விருதுநகர் மாவட்டம். 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தொகுதிகளின் பலம், பலவீனம் குறித்த ஒரு விரிவான தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

1985ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக உருவானது விருதுநகர். இது பாண்டியர் காலத்திலிருந்தே வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதியாகும். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் திருச்சுழி ஆகியவை இதன் முக்கிய மையங்கள். தொழில், வணிகம், கல்வி மற்றும் சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தென் தமிழகத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது.

காமராஜர்
காமராஜர்pt web

1950 முதல் தமிழக அரசியலின் முக்கிய மாற்றங்களைத் தீர்மானிக்கும் களமாகவும், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண்ணாகவும் இது போற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 7 தொகுதிகளில், கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி 6 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அதிமுக வசம் ஒரு தொகுதி மட்டுமே உள்ளது.

குறிப்பாக, திருச்சுழி தொகுதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் இங்கு திமுகவே வென்றுள்ளது. அதேபோல், அருப்புக்கோட்டையில் மூத்த அரசியலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 3 முறை வெற்றி பெற்று தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளார். ராஜபாளையம் மற்றும் விருதுநகர் தொகுதிகளிலும் திமுக தனது பிடியை வலுவாக வைத்துள்ளது. சிவகாசியில் காங்கிரஸ் கட்சியின் அசோகனும், சாத்தூரில் மதிமுகவின் ரகுராமனும் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிலாளர்கள்pt web

பட்டாசுத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள சிவகாசியில் கடந்த காலங்களில் அதிமுக, மதிமுக எனப் பல்வேறு கட்சிகள் மாறிமாறி வென்றுள்ளதால், எப்போதும் ஓர் இழுபறி நிலை நீடிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் தனித்தொகுதியில் கடந்த 5 தேர்தல்களில் அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் சமூகக் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விருதுநகர் மற்றும் சிவகாசியில் நாடார் சமூகத்தினரும், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டையில் முக்குலத்தோர் சமூகத்தினரும், சாத்தூரில் நாயுடு மற்றும் தேவர் சமூகத்தினரும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். ராஜபாளையத்தைப் பொறுத்தவரை ராஜுக்கள் மற்றும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரதானமாக உள்ளன. தொழில் வளம்,சாதியக் கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய அரசியல் செல்வாக்கு என மூன்றும் கலந்த விருதுநகர் தேர்தல் களம், இம்முறை யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதைக் காண சற்றுப் பொறுத்திருப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com