விருதுநகர்: பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால், 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள மங்காபுரத்தை சேர்ந்தவர் குருவையா. இவருடைய இரண்டாவது மகன் பரமகுரு. இவர், ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் கொரோனா விடுமுறை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்ததால், பரமகுரு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு 12-ஆம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளதால், பரமகுருவை பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் பரமகுரு பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.
இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவர் பரமகுரு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் துறையினர், பரமகுரு சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மங்காபுரம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

