புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்களின்றி சிறப்பாக நடைபெற்ற சதுர்த்தி விழா

புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்களின்றி சிறப்பாக நடைபெற்ற சதுர்த்தி விழா
புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்களின்றி சிறப்பாக நடைபெற்ற சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் பக்தர்களின்றி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோவிலில், முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி, பக்தர்களின்றி நடைபெற்றது. காலை 11 மணியளவில், வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க, தலைமை குருக்கள் அங்குச தேவருடன் மூன்றுமுறை நீரில் மூழ்கிய பின்னர், புனித நீர் கூடியிருந்த பக்தர்களின் மேல் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவர், கோவில் பிரகாரத்தைச் சுற்றிவரும் நிகழ்ச்சியும் மிக எளிமையாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில், ஆண்டுதோறும் 10 நாட்கள் தொடர்ந்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் எளிமையாகவே நடைபெறுகிறது. தேரோட்டம், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 190 டன் எடைகொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு ராஜ அலாங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடத்தப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலை 19 அடி உயரம் கொண்டதாகும். கொரோனா தொற்று பரவலால் கோவிலுக்குச் சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், வாசலில் நின்றபடியே, பொதுமக்கள் விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.

புதுச்சேரியில் பொது இடங்களிலும் கோயில்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் காலைமுதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் செல்கின்றனர். சிறப்பு அபிஷேகம் முடிந்ததும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர, புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் 5 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 25 பேர் மட்டும் கூடவேண்டும், சிலை வைக்கும் குழுவினர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் இருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடனே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com