கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! மற்றவர்கள் நிலை?

கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! மற்றவர்கள் நிலை?

கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! மற்றவர்கள் நிலை?
Published on

கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது விழுப்புரம் நீதிமன்றம். இவர்கள் ஒவ்வொருவரும் அருகில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகள் நடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்து கடலூர், வேலூர், திருச்சி ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்களில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கனியாமூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 296 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, `கலவரத்தை வேடிக்கை பார்க்க சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. எனவே இவர்கள் 296 பேரின் எதிர்காலம் கருதி ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல் சுப்பிரமணியன் குறுக்கிட்டு, `கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பின்பற்றியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் போலீசாரின் விசாரணை இன்னும் முடியாததால் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பூர்ணிமா, 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன், 45 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். அதோடு 174 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணையை அதாவது இன்று நடைபெறும் என உத்தரவிட்டதோடு 13 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 64 பேரும் தனித்தனியாக ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் செலுத்த வேண்டும், 64 பேரும் அவரவர் உள்ளூர் முகவரியில் உள்ள பிராந்திய நிலையில் வரக்கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுமுறை நாட்கள் உள்பட மறு உத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளையும் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து மறு உத்தரவு வரும் வரை அவரவர் விரும்பும் பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகளை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து பிராந்திய எல்லையில் வரக்கூடிய குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சமர்பிக்க வேண்டும் போன்றவை நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி பூர்ணிமா இந்த உத்தரவுகளை பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com