தமிழ்நாடு
மினியேச்சர் ரக வாகன வடிவமைப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்
மினியேச்சர் ரக வாகன வடிவமைப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்
விழுப்புரம் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லி. இளைஞரான இவர் பொழுதுபோக்கிற்காக மினியேச்சர் ரக வாகன வடிவமைப்பு பணியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.
பொது போக்குவரத்துகள் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்து நிற்க சார்லி வடிவமைத்துள்ள மினியேச்சர் ரக வாகனங்கள் ஓய்யாரமாக அவர் வீட்டின் மாடியில் உலா வருகின்றன. இது குறித்து அவரை தொடர்பு கொண்டு பேசியபோது “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே விழுப்புரத்தில் தான். இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 13 வயதிலிருந்தே மினியேச்சர் டைப் வாகனங்களை உருவாக்குவதை ஒரு பொழுதுபோக்காக செய்து வருகிறேன்" என்றார்
மேலும் " ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நாட்களில் ஃபுரோப்ஷனலாக செய்ய பழகிக்கொண்டேன். பஸ், லாரி என எல்லா வாகனத்தையும் மினியேச்சர் மாடலாக உருவாக்கி வருகிறேன். முதலில் வீட்டிலிருந்த அட்டைகளை வைத்து தான் செய்தேன். இப்போது அட்டைகள், LED லைட்டுகள், ஸ்ப்ரே பெயிண்ட்டுகள், பெஃபிக்கால் மற்றும் கலர் ஷீட்களை பயன்படுத்தி வருகிறேன். அசப்பில் பார்ப்பதற்கு நிஜ வாகனத்தை போலவே இருக்க வேண்டுமென்பதற்காக தான் இந்த முயற்சி" என்கிறார் சார்லி.
தொடர்ந்து பேசிய அவர் " ஒரு மினியேச்சர் வாகனத்தை உருவாக்க நான்கு நாள்கள் தேவைப்படும். அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் வரை செலவாகும். எனக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மினியேச்சர் வாகனங்களை உருவாக்க பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.
டாரஸ் லாரி, ஆம்னி ரக பேருந்து, தமிழ்நாடு அரசுப் பேருந்து என விதவிதமாக வாகனங்களை மினியேச்சர் வடிவில் வடிவமைத்து வருகிறார் சார்லி. இந்த மினியேச்சர் வானங்களை நகர்த்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.