
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் போக்குவரத்து ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் வாகனத்தை வேகமாக எடுக்க முற்பட்டனர்.
இந்நிலையில், சுதாரித்துக் கொண்ட போலீசார், அந்த காரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் அனைவரும் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஐந்து பேர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததும் தெரியவந்தது. இந்த சோதனையின் போது நன்றாக ஊதுமாறு போலீசார் இளைஞர் ஒருவரிடம் அழுத்தி சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.