விழுப்புரம்: மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

விழுப்புரத்தில், மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய இளைஞர் ஒருவரை, 10க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அரசு ஒப்புதலோடு மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் 11 ஹெக்டர் மட்டுமே மணல் அள்ள அரசு ஒப்புதல் அளித்த நிலையில், அதைவிட அதிக பரப்பில் மணல் அள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்கள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், முன்விரோதம் காரணமாக சிலர் தன்னை தாக்கியதாக ராஜா சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜாவின் தாய் சரஸ்வதி, “கிராம மக்களின் நலனுக்காக மட்டுமே தனது மகன் போராடினார். சுற்றுவட்டார மக்கள் எல்லோரும் இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டும். அப்படிப்பட்ட சமயத்தில் இவன் போய் இருக்க வேண்டும். அவர்களே, ’இது வேண்டாம். தங்களுக்கு காசுதான் வேண்டும்’ என்கிறபோது, நீ எதற்காகப் போராட வேண்டும்” எனக் கண்ணீர் மல்க பேசினார்.

ராஜாவின் சகோதரி மகேஸ்வரியோ, ”விவசாயிகளின் நலன் கருதிதான் எனது தம்பி ராஜா போராட்டம் நடத்தி வந்தார். அதற்காகவே என் தம்பியை அடித்துவிட்டனர். இதற்கு ஒரு நியாயம் கிடையாதா? என் வயிறு எரிகிறது. என் தம்பி கஷ்டப்படுகிறார். அந்த ஊர் மக்கள் என்ன செய்கிறீர்கள்” என அழுகை குறையாது பேசினார்.

கண்ணீர் மல்க பேசிய அவர்களின் கருத்தைக் கேட்க இந்த வீடியோவில் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com