விழுப்புரம்: அரசு உதவியை எதிர்நோக்கி, எரிந்த வீட்டில் மாற்றுத்திறனாளி மகளுடன் வாழும் தாய்
விழுப்புரத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், முக்கால்வாசி எரிந்த நிலையிலுள்ள ஒரு வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் வயதான அவரது தாயார் வாழ்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஏதாவது நிவாரணம் வழங்கும், அதன்மூலம் வீட்டை கொஞ்சம் சரிசெய்யலாம் என அரசின் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் அவர்கள்.
விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பு (வயது 60). இவருக்கு 3 ஆண்பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகி தனியே சென்று விட்ட நிலையில் ஐந்தாவது பெண்ணான ரஜினியுடன் வாழ்ந்துவருகிறார் தாய் குப்பு. இந்த ரஜினி, ஒரு கை ஒரு கால் இயங்காத மாற்றுத்திறனாளி.
இவர்கள் இருவரும், தங்களுக்கு சொந்தமான கூறை வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இருக்கும் போது, திடீரென கூரை வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. துணை ஏதுமில்லாமல் தன்னுடைய மாற்றுத்திறனாளி மகளை மட்டும் எப்படியோ அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் குப்பு. தாய் - மகள் இருவரும் போராடுவதை பார்த்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். ஒருவழியாக இருவரையும் பாதுகாப்பாக மீட்டு தீயை அணைத்துவிட்ட போதிலும், வீட்டுக்குள் இருந்த உடைகள் - பிளாஸ்டிக் பொருட்கள் - இரும்பு பீரோ போன்ற பொருட்கள் தீயில் கருகியுள்ளன. ஆதரவு ஏதும் இல்லாததால், எரிந்த நிலையிலிருந்த அதே வீட்டில் இருவரும் மீண்டும் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
எரிந்த நிலையிலுள்ள தங்கள் வீடு, விபத்துக்குள்ளானபோது, கிராம நிர்வாக அலுவலர் கணக்கெடுக்க கூட வரவில்லை என்கிறார்கள் இவர்கள். யாரும் ஆதரவு இல்லாத நிலையில் புகார் அளிக்க கூட முடியாத சூழ்நிலையில், பாதி எரிந்த வீட்டின் உள்ளே மிகவும் மோசமான சூழலுக்கிடையே வசித்து வருகின்றார்கள் இருவரும். மாவட்ட நிர்வாகமோ அரசோ தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கோரி, உதவிக்காக எதிர்நோக்கி இருக்கிறார்கள் தாயும் மகளும். உதவி கிடைக்குமா?
- ஜோதி நரசிம்மன்