தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமமக்கள் எதிர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என எடுக்கப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்து மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பில் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளின் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாசலில் கோலமிட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பண்டாரம்பட்டி மக்கள் சார்பில் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது நயவஞ்சகமான செயல். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததாக தமிழக அரசு கூறி உள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற எந்த கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்காமல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளனர். எனவே தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அதன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும்.
மீண்டும் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு தினமாகக் கடைபிடிக்கிறோம். இதற்காக வீட்டு வாசலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோலமிட்டு வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் எங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறோம்.
ஸ்டெர்லைட்டில் உண்மையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்கினால் மகிழ்ச்சிதான். ஆனால் அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் விஷத்தன்மை வாய்ந்தது. மேலும் இதை ஆதாயமாக பயன்படுத்தி இன்னும் சிறிது காலத்திலேயே தாமிர ஆலை முழுவதையும் திறந்து விடுவார்கள் என்ற அச்சமும் பயமும் எங்களுக்குள் இருக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசாங்கமும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.