ஆதார் கார்டு
ஆதார் கார்டுReporter

தருமபுரி: ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார், குடும்ப அட்டைகளை வீசிச்சென்ற கிராம மக்கள்! என்ன காரணம்?

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வீசிச்சென்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அரக்காசனல்லி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில், மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது.

இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல், முறைகேடாக நிலத்தை பயன்படுத்த மோசடியும் செய்து நிலம் தொடர்பான ஆவணங்களையும் நான்கு பேர் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோயில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இக்கிராமத்தில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ‘கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும்’ என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்க இன்று ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம்
தருமபுரி ஆட்சியர் அலுவலகம்

அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கிராம மக்களிடையே விசாரணை நடத்தியுள்ளார். பின், “இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது” என அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்பொழுது தங்களது நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைக்க போகிறோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா “வேண்டுமெனில் ஆவணங்களை வீசிவிட்டுச் செல்லுங்கள். ஆனால் நாங்கள் எதுவும் பண்ண முடியாது” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம்
தருமபுரி ஆட்சியர் அலுவலகம்

தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் கேட்பாரற்று கிடக்கிறது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com