அரியலூரில் 10எண்ணெய் கிணறுகள்; அதிர்ச்சி கொடுக்கும் ONGC-ன் திட்டம் - 500 ஏக்கர் நெல் சாகுபடி நிலை?

அரியலூர் மாவட்டத்தில்10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பம் செய்திருப்பது பற்றியும், கிராம மக்கள் அதனை எதிர்ப்பது பற்றியும் இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அரியலூர்
அரியலூர்pt web

அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஜூன் 15ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது. அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், காவிரி ஆற்றிலிருந்து கிணறு அமைவிடங்களின் தூரம் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் கடந்த ஜூன் 30ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதில் மீன்சுருட்டி அருகே உள்ள காட்டகரம் பகுதியில் இரண்டு கிணறும், குண்டவெளி பகுதியில் மூன்று கிணறும், முத்துசேர்வமடம் பகுதியில் நான்கு கிணறும் மற்றும் குறுங்குடியில் ஒரு கிணறும் என 10 உற்பத்தி கிணறுகள் அமைய உள்ளதாக தெரிகிறது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ள காட்டகரம் கிராமத்தில் மட்டும் பாண்டியன் ஏரி மூலம் 500 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற அனைத்து கிராமங்களிலும் ஆர்.எஸ்.பதி மரம், மக்காச்சோளம், கடலை, முந்திரி, கரும்பு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த மாதிரியான திட்டம் வருவதே அக்கிராம மக்களுக்கு தெரியவில்லை என்பதே வேதனைக்குரிய செய்தியாகும்.

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கோரினால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், எண்ணெய் கிணறுகளால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி சுவர்ணாவிடம் கேட்டபோது, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தம்மை நேரில் சந்தித்ததாகவும், ஆனால் எந்த தகவலும் கூறாமல் பேசியதால் சரியான புள்ளி விவரங்களுடன் தம்மை அணுகுமாறு கூறி அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com