பறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராம மக்கள் பறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்
தீபாவளி பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பட்டாசு வெடிப்பதை 24 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அமைந்துள்ளது கூந்தன்குளம் கிராமம். அங்கு உள்ள குளத்தை 'மக்களால் உருவாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம்' என்று 1994ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இந்த சரணாலயத்திற்கு சைபீரியா ,நைஜீரியா ,சுவிட்சர்லாந்து ,பிலிப்பைன்ஸ் ,ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் வருகை தருகின்றன. பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 வகை பறவைகள் கூந்தன்குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிகின்றன.
பறவைகளின் வருகை காலம் தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் கூந்தன்குளம் கிராம மக்கள் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிப்பதில்லை. பட்டாசுகளின் சத்தம் பறவைகளுக்கு இடையூறாகவும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதால் பட்டாசு வெடிப்பதில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தாங்கள் 24 ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகவும், தீபாவளி மட்டுமல்ல கோவில் கொடைவிழா , திருமண நிகழ்ச்சிகளில் கூட பட்டாசு வெடிப்பதில்லை என்பது கிராம மக்கள் கூறுகின்றனர்.