போராட்டக்காரர்களின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு... அலங்காநல்லூரில் சாலைமறியல்
ஜல்லிக்கட்டிற்காக அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராடியவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் அங்கு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.