பறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு!

பறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு!

பறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு!
Published on

வழக்கமாக ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் அது துயரமான விஷயம். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி கிராமத்தில் வெற்றிவேல் - பிச்சாயி தம்பதியினர் உயிரிழந்த நிகழ்வை அந்த கிராமமே மகிழ்வோடு கொண்டாடுகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. 

104 வயதை கடந்த வெற்றிவேலுவிற்கும் 100 வயதினை கடந்த பிச்சாயிக்கும் 75 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 மகன்கள், ஒரு மகள் 23 பேரன் பேத்திகள் 10 கொள்ளு பேரன்கள் உள்ளனர். தன் வாழ்நாளின் இறுதிவரை விவசாயம் பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் வெற்றிவேல். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக திடீரென வெற்றிவேல் உயிரிழக்க, அதனை அறிந்த பிச்சாயியும் தனது அன்பு கணவனை பிரிய மனமின்றி அவரும் அதிர்ச்சியில் சோகத்தில் உயிரிழந்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் அன்பாக வாழ்ந்து மரணத்திலும் கணவனோடு ஒன்றாக போக வேண்டும் என்ற மகிழ்வோடு தான் பிச்சாயியும் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். தம்பதிகள் இருவரும் 100 வயதை கடந்து பேரன் பேத்தி கொள்ளுப் பேரன்கள் வரை பார்த்து வாழ்ந்து மறைந்ததை ஒரு விழாவாக கொண்டாடி வருவதாக அவர்களது குடும்பத்தினரும், கிராமத்தினரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பறையாட்டம், கரகாட்டம், என ஏற்பாடு செய்து வெற்றிவேல் - பிச்சாயி தம்பதியினரின் இறுதி சடங்குகளை கோலாகலமாக அக்கிராமத்தினர் கொண்டாடினர். 

வெற்றிவேல் பிச்சாயி குறித்து பேசிய அப்பகுதி மக்கள், ''அவர்கள் எங்கு சென்றாலும் பிரிவதே இல்லை. ஒன்றாகவே போவார்கள் வருவார்கள். அவர்களுக்குள் சண்டை கருத்து வேறுபாடு இருந்ததே இல்லை. கருத்து வேறுபாடுகள் இன்றி வாழும் கணவன் மனைவியை காண்பதே அரிது என்று நினைக்கத்தோன்றும்.

இன்றைய நடைமுறை வாழ்வில், 75 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாக மறைந்த வெற்றிவேல் - பிச்சாயி தம்பதி அனைவருக்கும் எடுத்துக்காட்டு. இன்றைய இளம் தம்பதியினருக்கு குடும்ப வாழ்க்கை குறித்து வெற்றிவேல் - பிச்சாயி தம்பதி ஒரு பாடத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்'' எனவும் ஊர்மக்கள் நெகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com