
தனது தொழிலாளியின் திருமணவிழாவில் பங்கேற்ற சிங்கப்பூர் தொழில் அதிபர், தனது தொழிலாளி படித்த பள்ளிக்கூடத்திற்கு ரூ 4 லட்ச ரூபாய் மதிப்பிலான லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது அம்மங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று ஜெயபிரகாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்புகனி என்ற மணமகளுக்கும் ஊரணிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஜெயபிரகாஷ் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் ஜெயபிரகாஷ் படித்த சின்னஅம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று ஜெயபிரகாசுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அங்கு பயின்று வரும் 65 மாணவர்களுக்கு நான்கு லட்சம் மதிப்பீட்டில் லேப்டாப், ப்ரொஜெக்டர், ஸ்கிரீன், பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகங்கள், பேனாக்கள் வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர் பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் அங்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தனர்.
தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.