விக்கிரவாண்டி தொகுதியை காலி தொகுதியாக அறிவித்து அரசிதழ்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் செய்தி வெளிவந்துள்ளது. அண்மையில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை செயலகம் அந்த தொகுதி காலியாகி இருந்ததாக தெரிவித்து இருந்தது. இந்த தகவலானது அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் மக்களவை தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக நாகர்கோவில் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் அன்று காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். அத்துடன் சேர்ந்து காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது வலுத்துள்ளது.
இருப்பினும் இன்னும் 10 நாட்களே மக்களவை தேர்தலுக்கு இருப்பதால், அதற்குள் வேட்பாளர் அறிவிப்போ, பிரசாரமோ சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளிப்போகக்கூடும் என கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.