தமிழக - இலங்கை மீனவர் பிரச்னை: அன்றே மகத்தான யோசனை சொன்ன கேப்டன் விஜயகாந்த்! வைரல் வீடியோ!

தமிழக - இலங்கை மீனவர் பிரச்னைக்கு அன்றே ஒரு மகத்தான யோசனையைச் சொல்லியிருக்கிறார், இன்று காலமான கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்த்
விஜயகாந்த்ட்விட்டர்

நீரின்றி உலகு அமையாதோ, அதுபோல் அரசியலின்றி நாடு அமையாது. அப்படியான அரசியல் களத்தில் அருகே அமைந்துள்ள நாடுகளால் எல்லா நாடுகளுக்கும் பிரச்னைதான். எல்லையைக் கைப்பற்றுவதில் நாடுகளுக்குள் போட்டி இருப்பதாலேயே உலகில் பல நாடுகள் இப்பிரச்னையில் போரும் பஞ்சாயத்தும் நீள்கிறது. இது, உலக நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலுமே உள்ளது.

நமது நாட்டு எல்லையை பகிரும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இடையே எல்லைப் பிரச்னை இருந்துவரும் நிலையில், இலங்கை கடற்படையோ தமிழகத்தின் தனுஷ்கோடியைக் குறிவைத்து தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்கி வருகிறது. இதனால் வரலாற்றில், தமிழக மீனவர்கள் துன்பங்களை அனுபவித்து வருவது அதிகம். எனினும், இப்பிரச்னைக்கு இதுநாள்வரை இருநாடுகளும் தீர்வுகாண்பதில் முயலவில்லை. காரணம், இதற்குப் பின் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் இருந்தால்தானே அதைவைத்து பிழைப்பு நடத்தப்படும். ஆனால், இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் தீர்வுகாணும் அன்றே ஒரு நல்ல யோசனையை வழங்கியுள்ளார் இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்த்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர், “தனுஷ்கோடியிலிருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நான் ’சத்ரியன்’ படம் செய்யும்போது அங்கு வெடிப்பதைக் கண்ணால் பார்த்தேன். கண்முன்னாடி அப்படி ஒரு ஃபயரிங். தீபாவளியில் எப்படி வெடி வெடிக்குமோ, அதுபோல் அங்கே கண்முன்னே வெடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில், மீன் பிடிப்பதில் என்ன வித்தியாசம் வேண்டிக் கிடக்கிறது. இதில் ஏன் எல்லையைப் பிரிக்கிறீர்கள்? இரண்டு மீனவர்களும் சுமுகமாகப் போய் கடலில் மீன் பிடிக்கட்டுமே. தமிழக மீனவர்கள் அங்குபோய் பிடிக்கட்டும். சிங்கள மீனவர்கள் இங்கே வந்து பிடிக்கட்டுமே. இதில் ஏன் பிரச்னை?

கடற்பரப்பு இரண்டு நாடுகளுக்கும் வேண்டுமென்றால் இரு நாடுகளும் அதை, ஒவ்வொரு கிலோ மீட்டருக்குள் வைத்துக்கொள்ளலாம். அதன்படி, இந்திய எல்லையின் ஒரு கிலோ மீட்டருக்குள் ரோந்துப் படையை நிறுத்திக் கொள்ளுங்கள். அதுபோல் இலங்கையில் ஒரு கிலோ மீட்டருக்குள் ரோந்துப் படையை நிறுத்திக்கொண்டு, ‘இங்கு வராதீர்கள்’ என்று சொல்லுங்கள். எல்லாம் சரியாய் விடும். இதை விட்டுவிட்டு, சும்மா சுட்டார்கள்; பிடித்தார்கள்; மீன்வலையை அறுத்தார்கள், மானபங்கம் செய்தார்கள்; திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் என்ன இது” என அவர் சொன்ன ஆலோசனைதான் இன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உடல்நலக் குறைவால் விஜயகாந்த் இன்று மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com