திருமணம் டு இறப்பு: போண்டா மணியின் வாழ்வில் பொக்கிஷமாய்த் திகழ்ந்த விஜயகாந்த்!

நகைச்சுவை நடிகர் மறைந்த போண்டா மணியின் திருமணத்திற்காக நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தை ஒதுக்கிக் கொடுத்தவர் விஜயகாந்த்.
போண்டா மணி, விஜயகாந்த்
போண்டா மணி, விஜயகாந்த்ட்விட்டர்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி, தமிழ்த் திரையுலகில் கால்பதித்து நகைச்சுவை நடிகராக மின்னிய நேரத்தில், அவரையும் சக நடிகராக அரவணைத்துக் கொண்டவர் விஜயகாந்த் மட்டும்தான். அதைத்தான் இன்று ஊடகங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆம், அவருடைய கல்யாணத்தைத் தமிழகத்தில் சக நடிகர்களுக்கு மத்தியில் திறமையாக நடத்திக்காட்டி, நிதியுதவி வழங்கியவர் விஜயகாந்த். இன்னும் சொல்லப்போனால், அவருடைய திருமணத்திற்காக நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தை ஒதுக்கிக் கொடுத்தவர் விஜயகாந்த்.

போண்டா மணி, தன் திருமணத்தை நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தில் வைக்கலாம் என எண்ணி மண்டப நிர்வாகியை அணுகியிருக்கிறார். ஆனால், வேறு திருமணத்திற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. இதனால் வேறு எந்த இடத்தில் வைத்து திருமணத்தைச் செய்வது என தெரியாமல் திணறியிருக்கிறார் போண்டா மணி. இந்தத் தகவலானது அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்திற்குத் தெரியவந்தது. உடனடியாக மண்டப நிர்வாகியை தொடர்புகொண்ட விஜயகாந்த், ”நடிகர் சங்க திருமண மண்டபம் என்பது நடிகர்களுக்கானது. எனவே, அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதனால் யாரிடம் அட்வான்ஸ் வாங்கினீர்களோ அவர்களிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு போண்டா மணி திருமணத்தை நடத்துங்கள்" எனக் கூறியிருக்கிறார். அத்துடன் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அவருடைய கல்யாணத்துக்கு ஆதரவாய் இருக்கச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு முறை அவர் அரசியலில் பிஸியாக இருந்தபோது, விஜயகாந்த் வீட்டின் வாசலில் அவருக்காக நிறைய பேர் காத்திருந்துள்ளனர். அதில் போண்டா மணியும் ஒருவர். இதை அறிந்த விஜயகாந்த், உடனே முதலாவதாக நபராக போண்டா மணியைத்தான் உள்ளே அழைத்தாராம். அப்போது போண்டா மணி, “என்னே அண்ணே, உங்களுக்கு இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள். என்னைய முதலில் அழைக்கிறீர்களே” எனக் கேட்டாராம்.

அதற்கு விஜயகாந்த், “அரசியல் இப்ப வந்தது. ஆனா, சினிமா நண்பர்கள்தான் எனக்கு முதல்ல. நீங்க எல்லாம் என் நண்பர்கள்” எனச் சொன்னாராம். அதைக்கேட்டு போண்டா மணிக்கு அழுகையே வந்துவிட்டதாம். இப்படி, தொடர்ந்து போண்டா மணியின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த விஜயகாந்த், சமீபத்தில் அவர் மறைவின்போதுகூட, அவரது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, அவர்களின் குடும்பத்தில் என்றும் இடம்பிடித்தார். முன்னதாக, விஜயகாந்த்தின் உடல்நிலையைப் பார்த்து அதிகம் கண்ணீர் வடித்தவர்களில் போண்டா மணியும் ஒருவர். இப்படி, ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களை மட்டுமல்லாது, இங்குள்ள தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டவர் விஜயகாந்த். இன்று, அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாலும், என்றும் இம்மண்ணில் அவரது பெயர் நிலைத்து நிற்கும், கேப்டன் என்ற கம்பீரத்துடன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com