விஜயகாந்த் பிறந்தநாள் | கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய தொண்டர்கள் கூட்டம்.. திருவுருவச் சிலை திறப்பு
ஆண்டுதோறும் விஜயகாந்தின் பிறந்தநாள், தேமுதிக சார்பாக வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரது மறைவிற்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியன், கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பின் விஜயகாந்தின் திருவுறுவச் சிலையும் பிரேமலதா விஜயகாந்தால் திறந்துவைக்கப்பட்டது. முன்னதாக, காலை முதலே விஜயகாந்தின் நினைவிடத்தில் உணவு வழங்கப்பட்டு வந்தது. மதியமும் அன்னதானம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாகவும் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

