விருதுநகர் | காங்கிரஸூக்கு பயம்காட்டும் தேமுதிக விஜய பிரபாகரன்!

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறார், தேமுதிக வேட்பாளரும் விஜயகாந்தின் மகனுமான விஜயபிரபாகரன்
தேமுதிக விஜயபிரபாகரன்
தேமுதிக விஜயபிரபாகரன்முகநூல்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகனும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலாகவே, விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து சில சுற்றுக்களுக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் முன்னிலைக்கு வந்தார். அடுத்த சுற்றில் மீண்டும் விஜயபிரபாகரன் 32 வாக்குகள் முன்னிலை என தொடர்ந்து தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறார் விஜயபிரபாகரன்.

2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், விருதுநகரில் தேமுதிகவே போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகர் சாமி மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஒரு லட்சத்தி அம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்தமுறை மாணிக்கம் தாகூருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறார் விஜயபிரபாகரன்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும் அடக்கம். அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக எம்.எல்.ஏக்களே இருக்கின்றனர்.

மொத்தமுள்ள 14 லட்சம் வாக்குகளில், அந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே எட்டு லட்சம் வாக்குகள் இருக்கின்றன. தவிர, விஜயகாந்தின் சொந்த ஊரான இராமானுஜபுரம் இந்தத் தொகுதியில்தான் வருகிறது.

விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகான அனுதாப வாக்குகளும் விஜயபிரபாகரனுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் தலைவரான வைகோவை எதிர்த்து வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர். 2019 தேர்தலிலும் வெற்றிபெற்று எம்.பியாக இருக்கிறார். இந்தநிலையில், அவருக்கு முதல்முறையாக தேர்தல் களம் காணும் விஜயபிரபாகரன் கடுமையான போட்டியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

தேமுதிக விஜயபிரபாகரன்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிரொலி | பங்குச் சந்தையில் சரிவு, லாபம் கொடுக்கும் நிறுவனங்கள் எவை எவை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com