ரூபெல்லா தடுப்பூசி வாட்ஸ் ஆப் வதந்தியை நம்ப வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை
தட்டம்மை நோய் வராமல் தடுக்கும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசின் பல்நோக்கு மருத்துவமனையில், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து விளக்கம் அளித்தார். 9 மாத குழந்தைகள் முதல், 15 வயது வரையிலான சிறுவர்கள் வரையில், தட்டம்மை நோய் தடுப்புக்கான ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்றார்.
ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம் 100 சதவிகித இலக்குடன் செயல்படுத்தப்படுவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
ரூபெல்லா தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகள் நடத்தியிருப்பதோடு, இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்திருப்பதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இதனால், ரூபெல்லா தடுப்பூசி குறித்து, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், ரூபெல்லா தடுப்பூசி மருந்து குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.